×

50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் படிக்கட்டு பயணம்; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை: போக்குவரத்து துறைக்கு பரிந்துரை

சேலம்: சேலம் கோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டு பயணம் மேற்கொண்டு வருவதால், அப்பகுதிகளில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிந்து, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. இதனிடையே, மாநிலத்தின் பல பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வளைதலங்களில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் இதுபோன்ற ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வழித்தடங்கள் குறித்த பட்டியல் பள்ளிக்கல்வித்துறை சார்பில், தயாரிக்கப்பட்டது. தற்போது சம்பந்தப்பட்ட பகுதிகளில், கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் போதுமான பஸ் வசதி இல்லாததால், ஒருசில இடங்களில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த இடங்கள் தனியாக  பட்டியல் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி சேலம் மாநகரத்தில், சேலம் டவுன்-ஏற்காடு அடிவாரம், நெத்திமேடு, சேலம்-பேளூர் ஆகிய இடங்களிலும், புறநகரில் தலைவாசல்-ஆத்தூர்-கெங்வல்லி, இளம்பிள்ளை, இடைப்பாடி, சங்ககிரி, வாழப்பாடி, ஓமலூர் என 20க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளிலும், தர்மபுரி மாவட்டத்தில் ஏரியூர், பரிகம், கடத்தூர், பாப்பாரப்பட்டி, பென்னாகரம், அரூர் பகுதிகளிலும் என சேலம் கோட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வழித்தடங்கள், கூட்ட நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டு பயணம் மேற்கொள்ளும் வழித்தடங்களாக பட்டியலிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில், பள்ளி, கல்லூரி நேரங்களில் மாணவிகளுக்காக தனியாக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும், காவல்துறை கட்டுப்பாட்டு அறை, உள்ளூர் காவல்நிலைய தொடர்பு எண்களை பஸ்களில் இடம் பெறச் செய்ய வேண்டும், உரிய ஸ்டாப்களில் பஸ்களை நிறுத்தி, மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும், பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் ெசய்ய தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பள்ளிக்கல்வித்துறைக்கும் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, 6 முதல் 10 வகுப்பு வரைக்கும், 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான நேரங்களில் மாற்றம் செய்யலாம். அதிக மாணவர்கள் பயணம் செய்யக்கூடிய வழித்தடங்களில், கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து துறைக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வலியுறுத்த வேண்டும்.  ஆபத்தான படிக்கட்டு பயணத்தால் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, பதாகைகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். படிக்கட்டு பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் குறித்து, அவரது பெற்றோர்களை அழைத்து எச்சரிக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில், போக்குவரத்து, வருவாய் மற்றும் காவல்துறையினரை அழைத்து வந்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரோந்து போலீசார், இந்த ஆபத்தான பயணம் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். …

The post 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் படிக்கட்டு பயணம்; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை: போக்குவரத்து துறைக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Fort ,Department of Transportation ,
× RELATED தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜகவினர் 80 பேர் கைது